செய்திகள்

மட்டக்களப்பில் காணி அற்றவர்களுக்கு உறுதிகள் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிகள் அற்ற குடும்பங்களுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு,கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட்,கிழக்கு மாகாண காணி அமைச்சர் ஆரியவதி கலபதி,மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா,சீ.யோகேஸ்வரன் உட்பட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண காணித்திணைக்களம் மற்றும் மத்திய காணித்திணைக்களத்தினால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட காணி நடமாடும்சேவைகள் ஊடாக காணி உறுதிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட சுமார் 3600பேருக்கு இந்த காணி உறுதிகள் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

காணி உறுதிகள் அற்றவர்களுக்கு தொடர்ந்தும் இவ்வாறான காணி உறுதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் காணி அமைச்சர் இங்கு தெரிவித்தார்.