செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் நேற்று காணாமல்போன பெண் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை மாங்காடு விஸ்ணு ஆலய வீதியின் கடற்கரைப்பகுதியில் பெண்னொருவரின் சடலம் அடைந்துள்ளது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு பொதுமக்களினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு சடலமான மீட்கப்பட்டவர் களுதாவளை 2ஆம் வட்டாரம் தேவாலய வீதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயரான 63வயதுடைய சி.பரஞ்சோதி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை வீட்டில் இருந்துவெளியேறிச்சென்றவர் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் இவரை தேடிவந்ததுடன் களுதாவளை பொலிஸ் காவலரணிலும் முறையிட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே மாங்காட்டு பகுதியில் இருந்து உள்ள கடற்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் பிரேம்நாதின் உத்தரவுக்கமைய சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை மாவடிவீதியை சேர்ந்த 24வயதுடைய கு.வதனா என்னும் யுவதியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவில் இறுதிவருட மாணவியான இவர் நேற்று வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்ற நிலையில் குறித்த பெண் மட்டுமே தனிமையில் இருந்துவந்த நிலையிலேயே இவர் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரியாழில்ன உத்தரவுக்கமைய களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று மற்றும் இன்று நடைபெற்ற இந்த சம்பவங்கள் தொடர்பில் நேரில் சென்று களுவாஞ்சிகுடி பிரதேச மரண விசாரணை அதிகாரி கே.காராளசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_0125