செய்திகள்

மட்டக்களப்பில் காணி அபகரிப்பு தொடர்பில் விசாரணைசெய்ய சென்றவர்களுக்கு பொலிஸார் முன்னிலையில் மிரட்டல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி காணிகளை பிடித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க சென்ற அதிகாரிகளை பொலிஸாருக்கு முன்பாக பொல்லுகளை காட்டி மிரட்டியதாக மண்முனை வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பிள்ளையாரடிக்கும் தன்னாமுனைக்கும் இடைப்பட்ட இயற்கை சூழல் நிறைந்த பகுதிகள் அத்துமீறி பிடிக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுவந்தன.

இந்த நிலையில் இது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்ததுடன் அத்துமீறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றது.

இதன்கீழ் அத்துமீறிய காணி அபகரிப்பை செய்ததாக கூறி அப்பகுதிக்கு சென்ற உதவி பிரதேச செயலாளர் மற்றும் காணி திணைக்கள அதிகாரிகளை குறித்த காணியின் உரிமையாளர் பொல்லுகள் கொண்டு மிரட்டியதாக தெரிவித்தனர்.

எனினும் தங்களுடன் பாதுகாப்புக்கு பொலிஸார் வந்த நிலையிலும் குறித்த நபருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லையெனவும் பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த காணி தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் எதுவித பதிவுகளும் இல்லையெனவும் அந்த இடம் அரசாங்கத்துக்குரிய இடம் என்ற வகையிலேயே குறிப்புகள் உள்ளதாகவும் மண்முனை வடக்கு பிரதேச செயலக காணிப்பிரிவு தெரிவிக்கின்றது.

03