செய்திகள்

மட்டக்களப்பில் தேர்தலுக்காக அரசவளம் துஷ்பிரயோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச வளங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக நிவாரண நடவடிக்கைகள் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவு நடவடிக்கைகள் அதிகளவில் அரசாங்கத்தினால் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அரசாங்கத்தின் பிரதியமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் பொதுவான அரச கூட்டங்களுக்கு மக்கள் அழைக்கப்பட்டு தேர்தல் பிரசாரக்கூட்டமாக மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் சிறார்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளது.

தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் உருவப் படங்களை ஏந்துவதற்கும் கொடிகளை அசைப்பதற்கும் சிறார்கள் பயன்படுத்தப்பட்ட பல சந்தர்ப்பங்கள் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டன. சிறார்கள் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை அரசு, சிறார்களின் உரிமைகளைக் காப்பதற்கு கடமைப்பட்டுள்ளதாக நல்லாட்சிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சேனக டி சில்வா தெரிவித்தார். இந்த சட்டவிதிமுறைகளுக்கு அமைய சிறார்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்