செய்திகள்

மட்டக்களப்பில் புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்பு அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுவரும் நிகழ்வுகள் தொடர்பில் புலனாய்வுத்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இன்று காலை முதல் மட்டக்களப்பில் நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்லும் புலனாய்வுத்துறையினர் தீவிர கண்காணிப்புகளை மேற்கொண்டுவருகின்றனர்.

நாளை மே 18ஆம் திகதி முள்ளியவாய்க்கால் நினைவுதினம் நினைவுகூரப்படும் நிலையில் அதற்கு ஏதுவான வகையில் நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றதா என்பது தொடர்பிலேயே இந்த கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கலந்துகொண்ட இரு நிகழ்வுகளுக்கு சென்று படைப்புலனாய்வாளர்கள் தகவல்களைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஆலயங்களும் புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன.

போரினால் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூர அரசாங்கம் அனுமதியளித்துள்ளபோதிலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக புலனாய்வுத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் நல்லாட்சி என்று கூறிவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் மக்களின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.