செய்திகள்

மட்டக்களப்பில் பெண்களிடம் வழிப்பறிக்கொள்ளை அதிகரிப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் தனியாகச்செல்லும் பெண்களிடம் வழிப்பறிக்கொள்ளைகள் அதிகரித்துவருவது தொடர்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அமிர்தகழியில் ஆலயத்திற்கு சென்ற வயோதிபப்பெண்ணின் தாலிக்கொடியினை பறித்துச்செல்ல கொள்ளையர்கள் முற்பட்டபோது அவரின் சாதுரியத்தினால் அது தடுக்கப்பட்டுள்ளது.

இவர் ஆலயத்தில் இருந்து வீடு செல்லும்போது வீதியில் ஒருவர் கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு இருந்துள்ளார்.மற்றவர் மோட்டார் சைக்கிளில் இருந்துள்ளார்.

திடிரென தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவர் குறித்த வயோதிபப்பெண்ணின் தாலிக்கொடியினை பிடித்து இழுத்துள்ளார்.எனினும் குறித்த பெண் தாலிக்கொடியினை பிடித்துக்கொண்டு கூக்குரல் இடவே கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இவ்வாறான பல சம்பவங்கள் அண்மைக்காலமாக மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுவருகின்றபோதிலும் இதுவரையில் யாரும் கைதுசெய்யப்படவில்லையெனவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.