செய்திகள்

மட்டக்களப்பில் யானைகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க விசேட திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள யானைகளின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் கடந்த காலத்தில் யானையின் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்காக தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் அது தொடர்பில் ஆராயும் விசேட உயர் மட்டக்கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம், மா.நடராஜா,பிரசன்னா இந்திரகுமார்,ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரும் வனஜீவராசி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வீரசேகர,மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சுரேஸ் உட்பட பிரதேச செயலாளர்கள்,உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்த காலத்தில் இடம்பெற்ற யானை தாக்குதல்கள் தொடர்பிலும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் யானை தாக்குதல்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

குறிப்பாக கடந்த காலத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கூட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன் அவர்களின் வினைத்திறன் இல்லாத செயற்பாடுகளே பொதுமக்கள் யானை தாக்குதலினால் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

எல்லைப்புறங்களில் யானை வேலிகளை அமைப்பதற்கு தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடுசெய்யப்பட்ட 90மில்லியன் ரூபா தொடர்பில் இங்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் கேள்வியெழுப்பப்பட்டது.

இது தொடர்பில் பதில் அளித்த வனஜீவராசி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வீரசேகர,அந்த காலப்பகுதியில் தான் கடமையாற்றவில்லையெனவும் அந்த நிதி தொடர்பான எந்த பதிவுகளும் தமது திணைக்களத்தில் இல்லையெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் இருவாரங்களுக்குள் விசாரணைமேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த காலத்தில் இந்த நிதி தொடர்பில் பல கடிதங்களை எழுதியபோதிலும் இதுவரையில் எதுவித பதில்களும் அளிக்கப்படவில்லையெனவும் தெரிவித்தார்.

அத்துடன் யானை தொடர்பிலான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் பொதுமக்கள்,இராணுவம்,ஊர்காவல் படையினர்,பிரதேச செயலகங்கள் இணைந்து யானைகளை விரட்டுவதற்கும் எல்லைகளுக்குள் மீண்டும் யானைகள் வராமல் பாதுகாப்பது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

IMG_0035 IMG_0036 IMG_0056