செய்திகள்

மட்டக்களப்புக்கு இந்திய தூதர் விஜயம்

இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அபிவிருத்தி மற்றும் மீள்கட்டமைப்புக்காக 1.6பில்லியன் டொலரினை வழங்கியுள்ளதாக இந்திய தூதுவர் எஸ்எச்.வை.கே.சிங்ஹா தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இந்திய தூதுவர் மட்டக்களப்பு, கல்லடியில் இந்திய உதவியுடன் செயற்பட்டுவரும் பெண்கள் சுயதொழில் பயிற்சி நிலையத்துக்கு விஜயம் செய்தார்.

பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கம் இந்தியாவின் சேவா அமைப்பின் உதவியுடன் இந்த பயிற்சியை மேற்கொண்டுவருகின்றது.

2011ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த திட்டத்தின் கீழ் இரண்டு வருட பயிற்சியை நிறைவுசெய்த 25 பெண்களுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் இணைப்பாளர் ஏ.ரஜினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,தொழில்துறை திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் அருள்மொழி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சேவா அமைப்பில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பெண்கள் சுயதொழில் சங்கமானது தங்களது சுய உழைப்பில் இந்த பயிற்சியை முடித்ததில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.சேவா நிகழ்வானது 2016ஆம் ஆண்டு செப்டம்பர் வரையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் வெற்றி காரணமாக இது மட்டக்களப்புக்கு மாத்திரம் இன்றி அம்பாறை மாவட்டத்துக்கும் வடக்கு மாகாணத்துக்கும் விரிவாக்கப்படவுள்ளது.இந்திய அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கையில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கும்,மீள்கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்கும் உதவிவருவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த நாட்டில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இந்த நாட்டுக்கு 1.6பில்லியன் டொலரினை அபிவிருத்திக்காக வழங்கியுள்ளது.இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களில் மிக முக்கியத்துவமான திட்டமாக 50ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.வடக்கு கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் இவை அமைக்கப்பட்டுவருகின்றது.

இந்திய பிரதமர் அண்மையில் இலங்கைக்கு வந்தபோது வடமாகாணத்தில் அமைக்கப்பட்ட வீடுகளை அந்த மக்களுக்கு கையளித்திருந்தார்.அவர் கிழக்கு மாகாணத்துக்கு வருவதற்கு மிகவும் ஆவலாக இருந்தார்.குறுகிய காலமே இலங்கை பயணத்துக்கு ஒதுக்கப்பட்டதன் காரணமாக வரமுடியவில்லை.ஆனால் அடுத்தமுறை இலங்கை வரும்போது நிச்சயமாக கிழக்கு மாகாணத்துக்கு வருகைதருவதாக அவர் என்னிடம் கூறியுள்ளார்.

எமது இந்திய பிரதமர் இந்த நாட்டுக்கு விஜயம் செய்ததன் பின்னர் நான் முதன்முறையாக மட்டக்களப்புக்கு விஜயம் செய்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்திய அரசாங்கம் எதிர்காலத்தில் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும் மீள்கட்டுமானத்துக்கும் தமது உதவிகளை வழங்கும் என இங்கு நான் உறுதியளிக்கின்றேன்.

IMG_0004 IMG_0016 IMG_0018 IMG_0021 IMG_0071 IMG_0079