செய்திகள்

மட்டக்களப்பு கிராம சேவையாளர் கொலை தொடர்பில் முறையான விசாரணை நடத்த வலியுறுத்து

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம்,குறித்த படுகொலைக்கு வன்மையான கண்டனத்தினையும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஞானசிறி கருத்து தெரிவிக்கையில்,

மகிழூர் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்னும் கிராம சேவையாளர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவரும் நிலையிலும் விசாரணைகளை முறையான வகையில் முன்னெடுக்கவேண்டும் என்று கோருகின்றோம்.

விசாரணைகளை திசைதிருப்புவதான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாது குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையினை பெற்றுக்கொள்ளும் வகையில் பொலிஸார் நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டும்.

எதிர்காலத்தில் கிராம சேவையாளர்கள் தங்களது கடமையினை சுதந்திரமாக முன்னெடுக்கும் வகையிலான பாதுகாப்புகளை உhயி தரப்பினர் கிராமசேவையாளர்களுக்கு வழங்கவேண்டும்.

குறித்த கிராம சேவையாளரின் படுகொலையினை கண்டித்து நாளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கிராமசேவையாளர்கள் கறுத்த பட்டியணிந்து தமது எதிர்ப்பினை தெரிவிக்கவுள்ளதுடன் பிரதேச செயலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தவுள்ளனர் என தெரிவித்தார்.