செய்திகள்

மட்டு.ஏறாவூர் பாடசாலையின் அதிபர் நியமன சர்ச்சைக்கு தீர்வு

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பெற்றோருக்கும் பாடசாலை நிர்வாகத்துக்குமிடையில் ஏற்பட்டிருந்த சர்ச்சைக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபரொருவர் கடமையாற்றி வரும் நிலையில், புதிதாக ஒரு அதிபர் நியமிக்கப்பட்டமையால் கடந்;த வெள்ளிக்கிழமை முதல் மாணவர்களினால் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை (29) இப் பாடசாலைக்கு நேரடியாக விஜயம் செய்த கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், ஏறாவூர்ப்பற்று கோட்டக் கல்வி அதிகாரி எம். பாலசுப்பிரமணியம் ஆகியோர், பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
குறித்த பாடசாலையில் ஏற்கெனவே கடமையாற்றி வந்த அதிபர் அதே பாடசாலையில் தொடர்ந்து கடமையாற்றத்தக்கவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், இப் பாடசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர், மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்துக்கு இடமாற்றப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டமும் கைவிடப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் தொடர்பான சர்ச்சையையடுத்து, தரம் 01 தொடக்கம் 13ஆம் வகுப்பு வரையான மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் கடந்த வாரம் முதல் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.