மட்டு. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தின் புகழ்பாடும் கானாமிர்தம் இறுவெட்டு வெளியீடு (படங்கள்)
இலங்கையின் தான்தோன்றீச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தின் புகழ்பாடும் கானாமிர்தம் இறுவெட்டு வெளியீடு நேற்று பிற்பகல் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரின் புகழ் மற்றும் ஆலயத்தின் தொன்மையினை தாங்கியதாக இந்த இறுவெட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பாடல்களுக்கான இசையினை தென்னிந்திய திரைப்பட பாடகரும் இசையமைப்பாளருமான ரி.எல்.மகாராஜன், வழங்கியுள்ளதுடன் ரி.எல்.மகாராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கிருஸ்ணராஜ், ஸ்ரீ சந்தோஸ், மகதி, மகாநிதி ஷோபனா, உன்னிகிருஸ்ணன் ஆகியோர் பாடி பாடல்களை இனிமைப்படுத்தியுள்ளனர்.
இதன் வெளியீட்டு நிகழ்வு இன்று காலை கலாசார மண்டபத்தில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
முதலைக்குடா அமரர் ஆ.சிவஞானம் அவர்களின் குடும்பத்தினரினால் இந்த இறுவெட்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன் தான்தோன்றீஸ்வரர் மீதான பதிகங்களை உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், தேசபந்து அருணாசலம் சிவநேசராசா, கவிக்கோ வெல்லவூர்கோபால், கலாபூசணம் சிவஸ்ரீ க.லோகநாதன்குருக்கள், இளம் கவிஞன் சோலையூரான் ஆறுமுகம் தனுஸ்கரன் எழுதியுள்ளனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வி க.தங்கேஸ்வரி,பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம், மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அடியார்கள் கலந்து கொண்டனர்.