செய்திகள்

மண்சரிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை மூன்று இலட்சம் ரூபா வரை உயர்த்துவது குறித்து அரசு கவனம்

மண்சரிவு அபாயம் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு, வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை மூன்று இலட்சம் ரூபாய் வரை உயர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மண்சரிவினால் வீடிழந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக தற்போது ஒரு இலட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி குறிப்பிட்டார்.

மண்சரிவு அபாயம் நிலவும் இடங்களில் வாழ்கின்ற மக்களை வேறு பாதுகாப்பான இடங்களில் குடியேற்றுவதற்காக, அரசாங்கத்தினால் ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படுகின்றது.

எனினும், இந்த தொகை போதுமானதாக இல்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்பொருட்டு வழங்கப்படுகின்ற இழப்பீட்டுத் தொகையை மூன்று இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கான காரணங்கள் அடங்கிய அறிக்கையொன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க எண்ணியுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மேலும் தெரிவித்தார்.