செய்திகள்

மண்டூர் சமூக சேவைகள் உத்தியோகத்தர் கொலையாளியை கைதுசெய்யாவிட்டால் வெகுஜன போராட்டம்: கூட்டமைப்பு அறிவிப்பு

மண்டூரில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ச.மதிதயன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் கொலையாளிகள் ஒருவார காலத்துக்குள் கைதுசெய்யப்படாது விட்டால் மக்களுடன் இணைந்து வெகுஜன போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

மண்டூர் படுகொலை தொடர்பிலும் அது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

சமூகசேவைகள் உத்தியோகத்தரின் படுகொலையினை கண்டித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு,நல்லாட்சி நிலவும் இந்தவேளையில் இவ்வாறான செயற்பாடுகள் மக்களை மாத்திரம் அன்றி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தனர்.

மக்கள் மத்தியில் இருக்கும் அச்ச நிலையினை போக்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளதாகவும் அவற்றினை அவர்கள் செய்வார்கள் என நம்புவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பினை ஏற்றதுமுதல் மக்கள் ஓரளவு சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் இருந்த கால கட்டத்தில் வடகிழக்கில் இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

வடக்கில் மாணவி வித்தியாவின் படுகொலை.அதனைத்தொடாந்து கிழக்கில் மட்டக்களப்பு மண்டூரில் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவங்கள் வடகிழக்கு மட்டுமன்றி இலங்கை முழுவதும் உள்ள மக்களை துக்கதில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 26ஆம் திகதி மண்டூர் பகுதியில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமூகசேவைகள் உத்தியோகத்தர் சச்சிதானந்தன் மதிதயன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாததாகவும்.அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

இந்த கொலையுடன் தொடர்புபட்ட சூத்திரதாரிகள் யார் என்பதை கண்டுபிடிக்கமுடியாத நிலையில் பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் உள்ளனர்.இவ்வாறான நிலைமைகள் வடக்கு கிழக்கில் உள்ள மக்களை மீண்டும் ஒரு பீதி நிலைக்கு இட்டுச்செல்லும்.

இன்றில் இருந்து ஒரு வார காலத்திற்குள் இந்த சம்பவம் தொடர்பிலான குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தாவிட்டால் மக்களுடன் இணைந்து வீதிப்போராட்டங்களை நடாத்தவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுவோம்.

இவ்வாறான சூழ்நிலை இந்த நாட்டில் ஏற்படக்கூடாது.இவ்வாறான கலாசாரங்களை இந்த நாட்டில் இனியும் அனுமதிக்ககூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தினையும் பொலிஸாரையும் வேண்டிக்கொள்கிறது.

IMG_0200 IMG_0203