செய்திகள்

மண்முனை வடக்கு கோட்டத்தில் 49 மாணவர்கள் 09 ஏ சித்திகள்: வின்சன்ட் 24, மைக்கேல் 12, சிசிலியா 08

கா.பொ.த.சாதாரணதர பரீட்சையில் பாடசாலைகளில் இணையத்தளம் மூலம் பார்வையிடப்பட்டு கிடைக்கப்பட்ட தற்காலிக முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு,மண்முனை வடக்கு கோட்டத்தில் 49 மாணவர்கள் பாடங்களில் 09 ஏ சித்திகள் பெற்றுள்ளதாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.சுகுமாரன் தெரிவித்தார்.

வெளியாகியுள்ள கா.பொ.த.சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு இதுவரை வந்து சேராத நிலையில் இணையத்தளங்களில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இவை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் எட்டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் கோட்டக்கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.

இதன்கீழ் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 24 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன் புனித மைக்கேல் கல்லூரியில் 12 மாணவர்கள் 09 பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாகவும் புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் 08 மாணவிகள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திளைப் பெற்றுள்ளதுடன் மத்திய கல்லூரி சிவானந்தா தேசிய பாடசாலை ஆகியவற்றில் இரண்டு மாணவர்களும் கல்லடி,உப்போடையில் ஒரு மாணவியும் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பெறுபேறுகள் அதிகரிக்கலாம் எனவும் பாடசாலைகளுக்கான முடிவுகள் வந்ததன் பின்னர் பூரண விபரங்கள் வெளியிடப்படும் எனவும் கோட்டக்கல்வி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.