மதிநுட்பமும் மனித வாழ்வும்
மருத்துவர் சி. யமுனாநந்தா
தமிழ்மொழி மிகவும் இனிமையானது. மனிதனின் அறிவாற்றலை மதிநுட்பம் என்ற சொல்லால் விளக்குகின்றது. மதி என்றால் சந்திரன், நுட்பம் என்றால் திறனாற்றல் என்றும் பொருள்படின் மதிநுட்பம் என்பது சந்திரஒளிபோல் தட்பமாக இன்பத்தைத்தரும் ஆற்றலாகவும் அது தினமும் மாறுபட்டுக் கொண்டிருப்பதுபோல் மனிதனின் மதிநுட்பமும் மாறிக் கொண்டேயிருக்கும். மனிதனின் மதிநுட்பத்தினை இன்றைய ஆய்வாளர்கள் ஒன்பது வகைகளாகப் பிரித்து உள்ளனர். இவற்றினைச் சாதாரண மக்கள் மட்டுமல்ல பல்கலைக்கழகப் பேராளர்களும் அறிந்திருத்தல் அவசியம். இன்றைய அதிநவீன தொழில்நுட்ப யுகத்தில் தனிமனித தொடர்பாடல், சமூகத் தொடர்பாடல்கள், ஒழுக்க விழுமியங்கள் என்பனவற்றிற்கு மனிதனின் மதிநுட்பத்தின் பன்முக நோக்கு மிகவும் அவசியமானது. அவற்றின் சாரங்களை ஆய்ந்தறிவதனால் எமது சமூகம் மேன்நிலை அடையும். சிறந்த ஆற்றலுள்ள எதிர்காலச் சந்ததியினரை உருவாக்க முடியும்.
எல்லா மனிதர்களதும் மூளையின் கட்டமைப்பு ஒரே மாதிரியானவை. மனிதனின் உணர்வுகள், அனுபவங்கள் மூளையின் பல்வேறு பகுதிகளுடன் இணைந்து விழிநிலைகளை ஏற்படுத்துகின்றன. இதில் தற்போது வழங்கப்பட்டுள்ள நுட்பங்கள் :
1. இயற்கையுடன் இயைந்த மதிநுட்பம் ( Naturalistic intelligence)
இயற்கையைப் பாகுபடுத்தி அறியும் ஆற்றல். ஆதி மனிதன் இயற்கையை அறிந்து உணவைச் சேகரித்தான், வேட்டையாடினான், விவசாயம் செய்தான். சூழல் நேயத்தைப் பேண தற்போது இயற்கை பற்றிய மதிநுட்பம் தற்போது மிகவும் தேவை. தாவரங்களைப் பாதுகாத்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், பசுமை இயக்கங்கள் இத்தகைய மதிநுட்பத்திற்கு உட்பட்டவை.
2. சங்கீத மதிநுட்பம் (Musical intelligence)
இசையை உணர்ந்து அதனுடன் இணையும் திறமை. இத்திறமை உடையோர் கணித மதிநுட்பத்துடனும் திறமையுள்ளவராவர்.
3. தர்க்க கணித மதிநுட்பம் (Mathematical intelligence)
கணிதத்திறன், வாதிடும் திறன் என்பனவற்றுடன் தொடர்புடையது.
4. ஆத்மாத்த மதிநுட்பம் (Existential intelligence)
ஆழ்ந்த சிந்தனைகள், வாழ்க்கையின் அர்த்தங்கள், மனித வியாபகங்கள், இறப்பு என்பவை பற்றிய அறிவாற்றல் ஒருவருக்கு ஏற்படும் தெய்வீக உணர்வு அவரின் அனுபவத்தால் ஏற்படுவது. இது இயற்கையாகத் தியானம் செய்தல், புலன்களை அடக்குதல், சில பதார்த்தங்களின் பாவனை, மந்திர ஓசை, இசை என்பன மூலம் மீகளி மெய்மறநிலையை அடையலாம்.
5. உறவு மதிநுட்பம் (Interpersonal intelligence)
மற்றவர்களைப் புரிந்து கொண்டு அவர்களுடன் உறவாடும் திறமை. இதில் மற்றையவர்களின் உணர்வுகளை அறிந்து செயற்படும் ஆற்றல் இருக்கும். ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள், நடிகர்கள், அரசியல் வாதிகள் இத்திறமை உடையவர்கள்.
6. உடல் அசைவியக்க மதிநுட்பம் (Bodily Kinesthetic intelligence)
மனதையும், உடலையும் இயைத்துச் செயற்படும் ஆற்றல். விளையாட்டு வீரர்கள், நாட்டியக்காரர்கள், சத்திர சிகிச்சை நிபுணர்கள் இத்திறமை மிக்கவர்கள்.
7. மொழியாற்றல் மதிநுட்பம் (Linguistic intelligence)
மொழியாற்றல் மதிநுட்பம் எழுதுதல், வாசித்தல், கதை கூறுதல் என்பவற்றுடன் தொடர்புடையது. மொழியாற்றல் மதிநுட்பம்மிக்கோர் கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் ஆக விளங்குவர்.
8. மற்றையவர்கள் புரியும் மதிநுட்பம் (Interpersonal intelligence)
இன்னொருவரின் எண்ணங்கள், உணர்வுகள் என்பவற்றைப் புரிந்து அதனைப் பிரயோகிக்;கும் ஆற்றல். உளவியலாளர்கள், ஆன்மீகத் தலைவர்கள், தத்துவஞானிகள் இத்தகையவர்கள்.
9. பரிமாண மதிநுட்பம் (Spatial intelligence)
முப்பரிமாணத்தில் சிந்திக்கும் திறமை, மனதில் கற்பனை உருக்களை உருவாக்கக்கூடியவர்கள். வரைபுகள், சித்திரம், சிற்பம் என்பவற்றில் வல்லமை மிக்கவர்கள். மாலுமிகள், விமானிகள், சிற்பிகள், ஓவியர்கள், கட்டடக் கலைஞர்கள் இத்தகைய திறமைசாலிகள். பரிமாண மதிநுட்பம் மிக்க விஞ்ஞானமாக (Topological Science) பரிமாண சிந்தனை விருத்தியடைந்து உள்ளது.
ஒருவரின் மதிநுட்பம் அவர்களின் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்துகின்றது. மேற்கூறிய ஒன்பது வகையான மதிநுட்பமும் அனைவரிலும் குறித்த அளவில் காணப்படும். அதன் தண்ணொளி பௌர்ணமிபோல் பிரகாசிக்கலாம். அன்றேல் சேற்;றில் உள்ள இரத்தினக்கற்போல் மறைந்தும் இருக்கலாம். பொன்னைப் புடம்போடுவது போல் மனித மனதையும் தினமும் புடம்போடுதல் அவசியம்.