செய்திகள்

மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணனை நியமித்தது செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணனை நியமித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணனை நியமனம் செய்ததில் விதிமீறல் உள்ளதாக மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ஜெயராஜ், இஸ்மாயில் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தங்களின் மனுவில், “மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணனை நியமித்து 9.4.2012 அன்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டார். அதன்படி, கல்யாணி மதிவாணன் துணைவேந்தராக பதவியேற்றுக்கொண்டார். பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி,பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பதவி வகிக்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். கல்யாணி மதிவாணன் இணை பேராசிரியையாக மட்டுமே பணியாற்றி உள்ளார். பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் கல்யாணி மதிவாணனை துணைவேந்தராக நியமித்தமை நியாயமற்றது. எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கல்யாணியை பதவி நீக்கம் செய்ய கடந்த ஆண்டு ஜூன் 26ஆம் தேதி ஆணையிட்டனர் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கல்யாணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணனை நியமித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2010ம் ஆண்டு யூஜிசி கொண்டுவந்த விதிமுறைகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சட்டமாக்காததால் மதுரை பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமித்தது செல்லும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.