செய்திகள்

மத்தலை விமான நிலையம் மூடப்படமாட்டாது: அமைச்சர் உறுதி

ஹம்பாந்தோட்டை மத்தலை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் எக்காரணம் கொண்டும் மூடப்படமாட்டாது என சிவில் விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். சிவில் விமான சேவைகள் அமைச்சராக கடமையேற்றதன் பின்பு முதல் தடவையாக அமைச்சர் மத்தலை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை பரீட்சிக்க வருகை தந்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்ததாவது, மத்தலை சர்வதேச விமான நிலையத்தை மூடாமல் அதனை இலாமீட்டக் கூடிய விதத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு உத்தேசிக்கப் பட்டுள்ளது. பாரிய முதலீடுகளை மேற் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச தரத்திலான விமான நிலையத்தினை மூடாமல் சிறந்த திட்டமிடலின் அடிப்படையில் இலாபமீட்டக் கூடிய நிறுவனமாக முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சகல நாடுகளுக்கும் மேலதிக விமான நிலையங்கள் அத்தியாவசியமாகவுள்ளது. எமது நாட்டு விமானங்களுக்கு மாத்திரமன்றி வெளிநாட்டு விமானங்களுக்கும் மேலதிக விமான நிலையங்கள் திடீர் அனர்த்தங்களின் போது சேவைகளை, உதவிகளை வழங்கக் கூடிய, பெறக்கூடிய புதிய திட்டத்தின் அடிப்படையில் விமான நிலைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.