செய்திகள்

மத்திய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை கூட்டமைப்பு பெறுமா? சம்பந்தன் பதில்

பிராந்திய சுயாட்சியைப் பெற்ற பின்னரே மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை – மூதூர் ஈச்சிலம்பற்று, வட்டவான் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்வில் சம்பந்தன் இன்று கலந்துகொண்டார். கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப்பெறாமல் மாகாண சபையில் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் இதன் போது இரா. சம்பந்தனிடம் கேள்வியெழுப்பினர். இரா. சம்பந்தன் தெரிவித்ததாவது;

“மாகாண ரீதியாக எமது மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும். எமது மக்கள் தனிப்பட்ட மக்கள். அவர்களுக்கு ஒரு கலை, கலாசாரம், மொழிப் பாரம்பரியம் உண்டு. அந்த வகையில், அவர்களுக்கு ஒரு அரசியல் அந்தஸ்த்து கிடைக்க வேண்டும்.

மத்திய அரசாங்கத்தில் நாங்கள் சேர்வது பற்றி துரிதமாக செயற்படாமைக்குக் காரணம் பிராந்திய சுயாட்சியை நாங்கள் பெற வேண்டும். பிராந்திய சுயாட்சியைப் பெற்று எமது மக்களின் கைகளில் அதிகாரம் வந்த பின்னர் மத்திய அரசாங்கத்தில் சேர்வதா, இல்லையா என்பதைப் பற்றி பரிசீலிப்போம்” என்றார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளுமா எனக் கேட்கப்பட்ட போது பதிலளித்த சம்பந்தன், “இந்த அரசாங்கம் தொடருமாக இருந்தால் அதைப்பற்றி பரிசீலிக்க வேண்டிய தேவை ஏற்படும்” என குறிப்பிட்டார். “தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடி அந்த விடயம் தொடர்பாக முடிவெடுக்கும்” எனவு; அவர் தெரிவித்தார்.