செய்திகள்

மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைனின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் இலங்கை

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதி ஜயந்த தனபால முன்வைத்த கொள்கை விளக்க அறிக்கைக்கான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அல் ஹுசைனின் பதிலை இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடர் மார்ச் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை இந்தக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்ட சிரேஷ்ட இராஜதந்திரியான ஜயந்த தனபால மனித உரிமைகள் ஆணையாளரையும் முக்கிய அதிகாரிகளையும் ஜெனீவாவில் சந்தித்து பேச்சுக்களை நடத்திய பின்னர் நேற்று காலை கொழும்பு திரும்பியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்கள் தொடர்பாக ஆவணம் ஒன்றை மனித உரிமைகள் ஆயயாளரிடம் தான் சமர்ப்பித்ததாகவும், அதற்கான பதிலை தாம் இப்போது எதிர்பார்த்திருப்பதாகவும் நேற்றுத் தெரிவித்த ஜயந்த தனபால, எதிர்வரும் சனிக்கிழமை இந்தப் பதில் கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஐ.நா. அறிக்கையின் காரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டே தனபால அவசரமாக ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஜெனீவாவில் முக்கியமான பேச்சுக்களை நடத்திய அவர், இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.