செய்திகள்

மனைவியின் கைதுக்கான காரணத்தை மறைத்து அனுதாபம் தேட விமல் வீரவன்ச முயற்சி: மனோ

பிறப்பு சான்றிதழில் சொந்த பெயரை மாற்றலாம். அதற்கு சட்ட வழிமுறைகள் உள்ளன. ஆனால், பிறந்த திகதி, பிறந்த இடம், பெற்றோர் பெயர்கள் ஆகியவற்றை ஒருபோதும் மாற்ற முடியாது. அவற்றை மாற்றுவது மோசடியாகும். இது சட்டப்படி குற்றம். ஆகவே அது தொடர்பாக போலிஸ் நடவடிக்கை உண்டு. இத்தகைய குற்ற செயலை செய்துவிட்டுதான் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், இந்த குற்ற செயலை மறைத்து சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபம் தேட வீரவன்ச முயல்கின்றார். அது மட்டுமல்ல, பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் இன்று சிறை செல்ல வேண்டியுள்ளது என்று கூறி இனவாதத்தையும் கிளப்ப இவர் முயல்கிறார்.

பயங்கரவாதத்தை ஒழித்தோர் இன்று சிறை செல்ல வேண்டியுள்ளது என்று ஒப்பாரி வைக்கும் இவருக்கு சரத் பொன்சேகாவை பிடித்து சிறைக்கு அனுப்பியது ஞாபகம் இல்லையா? உலகத்திலேயே மிக சிறந்த இராணுவ தளபதி என்று இவர்களாலேயே பாராட்டப்பட்ட சரத் பொன்சேகாவை கழுத்தை பிடித்து, இழுத்து சென்று, சீருடையை கழற்றி, சிறையிட்டது மறந்து விட்டதா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

மகிந்த மீண்டும் அரசியலுக்கு வரலாம். அதற்கு அவருக்கு உரிமை உள்ளது. அதை யாரும் பறிக்கவில்லை. மகிந்தவுடன் எனக்கு தனிப்பட்ட கோபம் கிடையாது. நான் எப்போதும் அவருடன் கொள்கை முரண்பாடு கொண்டவன். அவரை கவிழ்த்துவிட்டவர்கள் அவருடன்கூட இருந்தவர்கள்தான். ஆகவே அவர் மீண்டும் வருவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னை பொறுத்தவரையில் அவர் மீண்டும் வரலாம். மீண்டும் வந்து இன்று இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவர் பார்க்கட்டும்.

ஆனால், அவரை மீண்டும் அழைத்து வரும் பாதை இனவாத பாதையாக இருக்க முடியாது. இதை மகிந்தவை பயன்படுத்தி கோட்டையை பிடிக்க நினைக்கும் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, கம்மன்பில மற்றும் முன்னாள் சிகப்பு சட்டை வாசுதேவ உள்ளடங்கிய நுகேகொடை குழு நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். இன்றைய அரசின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உட்பட அனைத்து கொள்கைகள் பற்றியும் இவர்கள் விமர்சிக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், இனவாதம், மதவாதம் இவற்றை கிளப்ப உரிமை இல்லை.

இன்று இந்த நாட்டில் புலிகள் இயக்கம் இல்லை. ஆயுத போராட்டம் இல்லை. ஆனால், நுகேகொடை குழு, இப்போது இந்த நாட்டில் புலிகளை தேடி திரிகிறது. புலிகள் எழுந்து வரமாட்டார்களா என்று ஏங்குகிறது. இதனால் இவர்கள் நால்வரும் பங்குதாரர்களாக இணைந்து புலிகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை இன்று அமைத்துள்ளார்கள். இந்த புலித்தொழிற்சாலையை இயக்குவதுதான் இவர்களது இன்றைய முழுநேரத்தொழில்.