செய்திகள்

மயூரன் மரணதண்டனைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது: எந்த நேரமும் தண்டனை நிறைவேற்றப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இந்தோனேசியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள மயூரன் சுகுமாரனும்,அன்றூ சானும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க மறுத்த இந்தோனேசிய ஜனாதிபதியின் தீர்ப்பிற்கு எதிரான மேல் முறையீடு செய்ய முடியாது என அந்த நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய ஜனாதிபதி இருவருக்கும் மன்னிப்பு வழங்க மறுத்தமைக்கு எதிராக மயூரன் சுகுமாரனும்,அன்றூ சானும் வழக்கு தாக்கல் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு எதிராக இன்று நீதிமன்றத்தில் அவர்களது வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்தோனேசிய ஜனாதிபதி இருவரினது வழக்கு தொடர்பாக உரிய கவனம் செலுத்தவில்லை என வழக்கறிஞர்கள் இன்று சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும் ஜகார்த்தாவிலுள்ள நீதிமன்றமொன்று தனக்கு இந்த வழக்கை விசாரிப்பதற்கு அதிகாரமில்லை என தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து இருவர் தொடர்பாக எதிர்காலத்தில் வழக்குகளை தாக்கல் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருவருக்குமான வாய்ப்புகள் முடிவடைந்துவிட்டதாக கருத்துகள் வெளியாகியுள்ளன.எனினும் தாங்கள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான திகதியை இந்தோனேசிய அரசு முடிவுசெய்யும். இந்த திகதிக்கு 72 மணித்தியாலங்கள் முன்னதாக இதுபற்றி மயூரனுக்கு அறிவிக்கப்படும். தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இவர்களை பார்வையிடுவதற்கு இவர்களது உறவினர்களுக்கு அனுமதி அளிக்கபப்டும்.