செய்திகள்

மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானம் மீட்பு! மகிந்தவின் புதல்வருக்குச் சொந்தமானதா?

கொழும்பு, நாரேஹென்பிட்டி பொருளாதார மையத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்தே இன்று செவ்வாய்கிழமை குறிப்பிட்ட களஞ்சியசாலையை சுற்றிவளைத்த பொலிஸார் அதனைக் கைப்பற்றினர்.

குறிப்பிட்ட களஞ்சியசாலையில் விமானம் ஒன்று மறைத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைத்தது. இதனையடுத்து குறிப்பிட்ட பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் விமானத்தை கைப்பற்றினார்கள்.

இரண்டு ஆசனங்களைக் கொண்ட குறிப்பிட்ட விமானம் பழைய ரகத்தைச் சேர்ந்தது என பொலிஸார் தெரிவித்தனர். இது எவ்வாறு இங்கு கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டது என்பதையும், இதன் பின்னணியில் இருந்தவர்களையும் அறிவதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சிறியரக விமானமானது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்  இளைய மகனால் கொள்வனவு செய்யப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, வெளிக்கள ஒளிபரப்புக்கு தேவையான உபகரணங்கள் சிலவும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.