செய்திகள்

மலாலா தாக்கப்பட்ட வழக்கு: 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்

பாகிஸ்தானில் பெண் கல்விக்காக பாடுபட்டு வரும் நோபல்பரிசு பெற்ற மலாலா மீது தாக்குதலை மேற்கொண்ட வழக்கில் 10 பேருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு மிங்கோரா நகரில் உள்ள பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்புகையில் மலாலா மீது தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டனர். இதில் அவர் படுகாயமடைந்தார். தலையிலும் வயிற்றிலும் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மலாலா தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாக்கிஸ்தானிற்கான தலிபான் அமைப்பு பொறுப்பேற்றது.

பின்னர் இவ்வழக்கில் அந்த அமைப்பை சேர்ந்த 10 பேரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு ஸ்வாட் நகரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது மலாலா மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.