செய்திகள்

மலேசிய பாராளுமன்றில் நிறைவேறிய கடுமையான தீவிரவாத தடுப்புச் சட்டம்

மலேசிய பாராளுமன்றத்தில் இன்று கடுமையான தீவிரவாத தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மலேசியாவில் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரணையின்றி கைது செய்து நீண்ட காலம் சிறையில் அடைக்க வகை செய்யும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் அமுலில் இருந்தது. இந்த சட்டம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 2012ம் ஆண்டு இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், தீவிரவாத தடுப்பு சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வர விரும்பிய அரசு, அதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது. 15 மணி நேரம் காரசாரமான விவாதத்திற்குப் பின்னர் இந்த மசோதா இன்று நிறைவேறியது.

இந்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், சட்ட ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கு இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படலாம் என்று குற்றம் சாட்டி, இந்த சட்டமசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.