செய்திகள்

மலையகத்தில் மாபெரும் தொழிலாளர் போராட்டம் வெடிக்கும் – மலையக மக்கள் முன்னணி தெரிவிப்பு

சம்பள பேச்சு வார்த்தையில் தொழிலாளர்களுக்கு சாதகமாக ஒரு முடிவு காணப்படாவிட்டால் மலையகத்தில் மாபெரும் தொழிலாளர் போராட்டம் வெடிக்கும்  என மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவிதமான இணைக்கப்பாடும் காணப்படாது எதிர்வரும் ஜூலை மாதம் 2ம் திகதி நான்காம் சுற்று பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் தொழிலாளர்களுக்கு சாதகமாக ஒரு முடிவு காணப்படாவிட்டால் மறுநாளான ஜூலை 3ம் திகதி மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் மலையகத்தில் மாபெரும் தொழிலாளர் போராட்டம் இடம்பெறும் என மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் விடுத்துள்ள ஊடாக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…

முதலாளிமார் சம்மேளனம் வைத்துள்ள மூன்று கோரிக்கைகளையும் நிராகரிப்பதாகவும் மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியோர் 2ம் திகதி இடம்பெறவிருக்கின்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நலன்புரி விடயங்களை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் மார்ச் 31ம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது. இதனை புதுப்பிப்பதற்காக இடம்பெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி கண்டுள்ள நிலையில் எதிர்வரும் 2ம் திகதி வரை பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.