செய்திகள்

மலையகத்தில் முதன் முறையாக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ஆய்வு கூடங்கள் திறந்து வைப்பு

பாடசாலைகளுக்குள் அரசியலை கொண்டுவராமல் பாடசாலை நிர்வாகத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஜ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட காபெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயம்,புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயம்,கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டது.

மலையகத்தில் முதல் முறையாக கல்வி இராஜாங்க அமைச்சருடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,தொழிலாளர் தேசிய சங்;கம் ஜக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த மூன்று தொழில்நுட்ப ஆய்வு கூடங்களையும் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை,மத்திய மாகாண விவசாயத்துரை அமைச்சர் முத்தையா ராமசாமி,மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன்,சிங் பொன்னையா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

இன்று ஒரு சில பாடசாலைகளில் அரசியல் நடைபெறுகின்றது.தயவு செய்து நான் அதிபர்களிடமும் ஆசிரியர்களிடமும் கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் கேட்டுக் கொள்வது அரசியலை பாடசாலைக்குள் கொண்டு வராதீர்கள்.அதனை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள்.எல்லோருக்கும் கட்சி அரசியல் இருக்கின்றது அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

அது பாடசாலைக்கு வெளியில் இருக்க வேண்டும்.நான் மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த பொழுதும் தற்பொழுது கல்வி இராஜாங்க அமைச்சராக இருக்கின்ற பொழுதும் யாரையும் அரசியல் ரீதியாக நான் பழிவாங்கியதில்லை.அதனை நான் என்றுமே செய்ததில்லை செய்யப் போவதுமில்லை.காரணம் நீங்கள் எல்லோரும் எங்களுடைய சமூகத்தை சார்ந்தவர்கள்.நான் மற்றவர்களிடம் கேட்பது தயவு செய்து இராதாகிருஸ்ணனை பழி வாங்குவதாக நினைத்து பாடசாலை மாணவர்களையும் அதிபர்களையும் ஆசிரியர்களையும் பழிவாங்க வேண்டாம்.

மிகவிரைவில் டிக்கோயா பகுதியில் எனது அமைச்சின் மூலமாக நுன்கலைக் கல்லூரி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.அதனை மிக விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.