செய்திகள்

மலையகத் தமிழர்களின் விடயத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் புரிந்துணர்வு

மலைய தமிழர்களின் விவகாரங்களில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அமைச்சர் ப.திகாம்பரத்திற்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் சீர்திருத்தத்தில் மலையக மக்களுக்கு நியாயமான ஒதுக்கீடுகள் தொடர்பிலேயே பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தொழிலாளர் தேசியமுன்னணியின் பொதுச் செயலாளர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

புதிய கலப்புமுறை தேர்தல் அறிமுகம் செய்யும் போது மலையக மக்களின் பிரதிநிதித்துவம் இடம்பெறும் வகையில் திருத்தம் அமைத்தல் வேண்டும். இலங்கையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளை நிவர்த்தி செய்யும் வகையிலேயே புதிய தேர்தல் முறைமையில் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதி;த்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்திலிருந்து தற்போது 5 தமிழ் உறுப்பினர்களும் 2 சிங்கள உறுப்பினர்களும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகின்றனர். இதனை புதிய முறை மாற்றியமைப்பதாக அமைந்துவிடக் கூடாது எனவும் அமைச்சர் ப.திகாம்பரம் தேர்தல்கள் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான யோசனைகளையும் அமைச்சர் எடுத்துரைத்துள்ளார். இந்த யோசனைகள் அடங்கிய எழுத்துமூல ஆவணத்தையும் அமைச்சர் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளித்துள்ளார்.

இந்தக் கோரிக்கைகளை தேர்தல்கள் ஆணையாளர் ஏற்றுக்கொண்டதுடன் மலையகத் தமிழர்கள் தொடர்பில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.