செய்திகள்

மலையகத் தலைமைகள் சுஷ்மாவிடம் முன்வைத்த நான்கு கோரிக்கைகள்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேற்று சந்தித்த மலையக கட்சிகளின் பிரதிநிதிகள்  இலங்கையில் இந்து பல்கலைக்கழகம் மற்றும் மலையகத்திற்கென  தனி பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பேசியுள்ளனர்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் , தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம் , இராஜாங்க பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் க.வேலாயுதம் மற்றும் இராஜாங்க கல்வியமைச்சர்  வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவே இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து மேற்படி கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இச்சந்திப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

தோட்டத் தொழிலாளர்களுக்காக மேலதிகமாக 20 ஆயிரம் வீடுகள் இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படவேண்டும், மலையகத்தில் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றை அமைக்கவேண்டும்.

அதேவேளை, ஏற்கனவே மலையகத்தில் இயங்கும் தொழில்நுட்பக்கல்லூரிகள் நவீன மயப்படுத்தப்படவேண்டும். இவை புதிய அரசாங்கத்துக்கு வழங்கப்படும் இந்திய நிதிக்குள் உள்வாங்கப்படவேண்டும் என மலையக பிரதிநிதிகள்  சுஷ்மாவிடம் கேட்டுக்கொண்டனர்.

மேலும், கொழும்பு இரத்மலானை  இந்துக்கல்லூரி வளாகத்தில் இந்துப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ இந்திய அரசு உதவ வேண்டும்.

நாடெங்கும் வாழும் இந்துக்கள் தங்கியிருந்து கல்விக்கற்க விடுதி வசதியுடன் இவ் இந்துப் பல்கலைக்கழகம்  அமைய வேண்டும். வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத பிள்ளைகளின் நலன் கருதி இந்தியா இப் பல்கலைக்கழகத்தை அமைக்கவேண்டும்.

மேலும், தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் மீண்டும் இணைத்துக்கொள்ள இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் அபிலாஷைகளை பெற்றுத்தர இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்பு தொடர்ந்து வழங்கப்படவேண்டும் என குறித்த மலையக பிரதிநிதிகள் தமது   இச்சந்திப்பில் கோரிக்கைகளாக சுஷ்மாவிடம் முன்வைத்துள்ளனர்.