செய்திகள்

மலையக மக்கள் இ.தொ.காவுடன் இணைந்து செயற்பட வேண்டும் : ஆறுமுகன் தொண்டமான்

மலையக சமூகத்தினர் பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வேண்டுமென காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கட்சியின் அமைப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் கொட்டகலை, ஊடக காரியாலயத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலப்பகுதிகளில் மக்களின் உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், விளையாட்டு, அரசதுறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆறுமுகன் தொண்டமான் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதவிர, தொழிலாளர்களின் சம்பள உயர்வு உட்பட அனைத்துத் துறைகளிலும் தமது கட்சியினால் பெருமளவு சேவையாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் அமைச்சராக இருந்தபோதே வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மீரியபெத்த இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தனிவீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக ஆறுமுகன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மலையக சமூகத்தினர் பொதுத் தேர்தலின்போது தங்களின் எதிர்காலம் கருதி ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.