செய்திகள்

மல்லையாவுக்கு மீண்டும் சம்மன்…….!

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராக, விஜய் மல்லையா அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல், 2ல் ஆஜராகும்படி, அமலாக்கப் பிரிவினர், அவருக்கு மீண்டும், ‘சம்மன்’ அனுப்பியுள்ளனர்.’கிங் பிஷர்’ விமான நிறுவன அதிபர் விஜய் மல்லையா, ஐ.டி.பி.ஐ., வங்கியில், 900 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

அந்த வழக்கை அடிப்படையாக வைத்து, இந்த தொகை, சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டப் பிரிவுகளின் கீழ், அமலாக்கப் பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கின் விசாரணைக்கு, நேற்று ஆஜராகும்படி, மல்லையாவுக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், விசாரணைக்கு ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டு, ‘இ – மெயில்’ மூலம் கடிதம் அனுப்பியிருந்தார், மல்லையா.

அதை பரிசீலித்த அமலாக்கப் பிரிவினர், ஏப்., 2ல் நேரில் ஆஜராகும்படி, விஜய் மல்லையாவுக்கு, மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். விசாரணைக்கு வரும் போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த முதலீடுகள், நிதி விவரங்கள், வருமான வரி கணக்குகள் உள்ளிட்ட விவரங்களுடன் ஆஜராகும்படி, அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டுஉள்ளது.

N5