செய்திகள்

மஹிந்தவுக்கு அழைப்பாணை: இரு நாள் விவாதத்துக்கு அரசு தயார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு விடுத்திருக்கும் அழைப்பாணை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதத்தை நடத்தத் தயாராக இருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

திஸ்ஸ அத்தநாயக்க எம்பிக்கு அமைச்சுப் பதவி வழங்கியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறி தினேஷ் குணவர்த்தன எம்பி கொண்டுவந்த சிறப்புரிமைப் பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சபை முதல்வர் இவ்வாறு கூறினார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு ஏன் இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது என்பதற்கான காரணம் எமக்குத் தெரியாது. இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக் குழு, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்களை பலப்படுத்த முற்படும்போதே எதிர்க்கட்சியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான பிரச்சினைகளைக் கிளப்பி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு முயற்சிப்பதாகவும் சபை முதல்வர் சுட்டிக்காட்டினார். இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் விவாதமொன்று தேவையெனக் கூறினால் இரண்டு நாள் விவாதத்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் சபை முதல்வர் மேலும் தெரிவித்தார்.