செய்திகள்

மஹிந்தவுக்கு ஐ.ம.சு.கூவில் இடம் இல்லாததால் அவரை புதிய அணியில் களமிறக்க முயற்சி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கு அந்த கூட்டமைப்பினதும் மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் மஹிந்தவை வேறு அணியில் களமிறக்குவதற்கு அவர் தரப்பு எம்.பிக்கள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதன்படி மூன்றாவது அணியொன்றை உருவாக்குவது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன , விமல் வீரவன்ச , வாசுதேவ நாணயக்கார  உள்ளிட்ட குழுவினர் தற்போது கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதேவேளை இந்த சந்திப்புகளில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள் சிலரும் கலந்துக்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்‌ஷவை கூட்டமைப்பில் பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் யோசனை தொடர்பாக கடந்த புதன்கிழமை ஜனாதிபதியை சந்தித்த போது கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி அவ்வாறு இடமளிக்க முடியாதேன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எப்படியும் மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கியே தீருவோம் என கூறிக்கொண்டிருக்கும் அவருக்கு ஆதரவானவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு புறம்பாக புதிய அணியோன்றை உருவாக்கி அவரை களமிறக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.