செய்திகள்

மஹிந்தவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கொண்டு செல்ல வேண்டாம் : எம்பிக்களின் போரட்டம் தொடர்கின்றது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கும் திட்டத்துக்கு எதிராக எதிர்க் கட்சி எம்.பிக்களால் பாராளுமன்றத்தில் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் தற்போதும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களுக்கு இது தொடர்பாக எழுத்து மூலமான உறுதிமொழிகள் வழங்கப்படும் வரை தமது போராட்டம் தொடருமென அந்த எம்.பிக்கள் இன்று மாலை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஊடகங்களை சந்தித்து தெரிவித்;துள்ளனர்.

இதேவேளை இதற்கு தீர்வினை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி 55 எம்.பிக்களின் கையொப்பங்கள் அடங்கிய கடிதமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபாநாயகரினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை அழைத்து இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை வழமைப்போல் பாராளுமன்றம் கூடிய பின்னர் நாளைய தினம் வரை கூட்டத்தொடரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்ததை தொடர்ந்து இவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் விமல் வீரவன்ச , டலஸ்அழகப்பெறும , குமார வெல்கம , மஹிந்தானந்த அலுத்கமகே ,வாசுதேவ நாணயக்கார , பந்துல குணவர்தன ஆகியோர் உள்ளிட்ட எம்.பிக்கள் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.