செய்திகள்

மஹிந்தவை பிரதமராக்க மைத்திரி இணங்கிவிடுவாரா? குழப்பத்தில் அரசியல்வாதிகள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற செய்யவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டுமென்ற  அந்த கட்சியின் மஹிந்த தரப்பு அணியினரின் கோரிக்கைகளுக்கு  மைத்திரிபால சிறிசேன இணங்கிப்போகும் நிலைலயிலேயே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சிக்குள் ஏற்படும் பிளவுகளை தவிர்ப்பதற்காக அவர் மஹிந்த அணியினரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் மஹிந்தவை தோற்கடிக்க வேண்டுமென  முன்னின்ற அரசியல்வாதிகள் குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நேற்று திங்கட்கிழமை  கொழும்பில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பாராளுமன்ற , மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி செயற்பாட்டாளரகளுடான  சந்திப்பின் போது அங்கு பலர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்றி தேர்தலில் வெற்றிப் பெற முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ள நிலையில் அது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதுடன் அதற்காக ஒற்றுமைபடுத்தும் குழுவொன்றை அமைக்குமாறும் கூறியுள்ளார்.
இதற்கிணங்க  கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா ,கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த அத்துடன் குமார வெல்கம , ஜோன் செனவிரட்ன , டி.பி.ஏக்கநாயக்க மற்றும் டிலான்பெரேரா ஆகியோர் உள்ளடங்களாக 6 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது டிலான் பெரேரா , குமார வெல்கம மற்றும் டி.பி. ஏக்கநாயக்க ஆகியோர் கட்சியை பிளவுபடாது வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமெனவும் இவ்வாறு வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஒத்துழைப்பு அவசியமாகுமெனவும் தெரிவித்ததுடன் இதற்காக அவரை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டுமெனவும் கோரிக்கையினை முன் வைத்ததுடன் கிராமங்கள் உள்ளிட்ட கீழ்மட்ட ரீதியிலான மக்களின் வாக்குகள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கே இருப்பதாகவும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவுக்கே இருப்பதாகவும் இதன்படி கட்சியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல  இருவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டுமெனவும் அவர்கள் ஜனாதிபதி மைத்திரியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வேளையில் அதற்கு மறுப்பு எதனையும் தெரிவிக்காத ஜனாதிபதி அவ்வாறாக ஒன்றிணைந்து செயற்படுவதற்காக குழுவொன்றை அமைக்குமாறு அவர்களுக்குக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்களால் குறித்த 6 பேர் உள்ளடங்கியதாக குழுவினை அமைத்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.