செய்திகள்

மஹிந்த குடும்பத்துக்கு தண்டனை வழங்கவேண்டும் : ஜே.வி.பி

மஹிந்த குடும்பத்தினர் கடந்த காலங்களில் மேற்கொண்ட ஊழல் மோசடிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமெனவும் அவர்களை தப்பிக்க விடவேண்டாமென ஜனாதிபதி மறறும் பிரதமரை கேட்டுக்கொள்வதாகவும் ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி செயற்பாடுகளுக்கு ராஜபக்‌ஷ குடும்பத்தினரே  காரணம் விசாரணைகளின் இறுதியில் அவர்களே குற்றவாளிகளாக இருக்கின்றனர். அதாவது திவிநெகும ஊழல் மோசடி தொடர்பான விசாரணையில் மஹிந்தவின் சகோதரர் பஸில் ராஜபக்‌ஷவும்  , அவன்காட் மற்றும் மிக் விமான கொள்வனவு விடயத்தில் கோதாபய ராஜபக்‌ஷவும் , சீ.எஸ்.என் அலைவரிசை விடயத்தில் யோசித்த ராஜபக்‌ஷவும்  ,கெத்தராம மைதானத்திலுள்ள பெறுமதியான மின்குமிழ்களை கண்டிக்கு கொண்டு சென்று திருப்பி கொடுக்காத விடயத்தில் நாமல் ராஜபக்ஷவும் , சிறிலிய சவிய விடயத்தில் சிராந்தி ராஜபக்‌ஷவும் , புஸ்பா ராஜபக்‌ஷ அமைப்பு விடயத்தில் பஸில் ராஜபக்‌ஷவின் மனைவியும் ,எயார் லங்கா விடயத்தில் சிராந்தி ராஜபக்‌ஷவின் சகோதரரும் , விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கிய விடயத்தில் மஹிந்த ராஜபக்‌ஷவும் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ளனர். இதன்படி இவர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்க வேண்டியுள்ளது.
நாட்டில் தற்போது குற்றவியல் திணைக்களம் , நிதி மோசடி விசாரணை பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஊடாகவே விசாரணைகள் இடம்பெறுகின்றன. இவற்றில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முக்கியமானது. ஆனால் ராஜபக்‌ஷ குழுவினர்  ஆணையாளர் ஒருவரை விலக செய்து அந்த ஆணைக்குழுவின் விசாரணைகளை செயலிழக்கச்செய்யும் வகையில் சூழ்ச்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி கண்டுள்ளனர். பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் மந்த கதியிலான செயற்பாடுகளே மஹிந்த குழுவினர் சூழ்ச்சிகளில் வெற்றிப் பெற காரணமாக அமைந்துள்ளது. இதனால் அரசியலமைப்பு பேரவையை செயற்பட செய்து குறித்த அணைக்குழுவுக்கான ஆணையாளரகளை நியமிக்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.
இதேவேளை முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்ட போது காணப்பட்ட வேகம் தற்போது இல்லை. அதாவது முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க விடயத்திலோ , சிராந்தி ராஜபக்‌ஷவிடயத்திலோ மற்றும் மற்றைய விசாரணைகளிலோ ஆரம்பத்தில் இருந்த வேகத்தை காணவில்லை. இது ஏன் என ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவுபடுத்த வேண்டும். ராஜபக்‌ஷக்கள் தப்பித்துக்கொள்வதற்கான சூழ்ச்சிகளுக்கு இடமளிக்காது அவர்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென நாம் ஜனாதிபதியிடமும் மற்றும் பிரதமரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.