செய்திகள்

மஹிந்த தலைமையில் மே தினக்கூட்டம்: பலத்தைக்காட்டத் தயாராகும் வாசு- விமல் அணி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைப் பலப்படுத்துவதற்கான அணி, எதிர்வரும் மே தினத்தை மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது. முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார இத்தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

கொழும்பு, நாரேஹன்பிட்டி அபேராம விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே வாசுதேவ நாயணக்கார இத்தகவல்களை வெளியிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“தொழிலாளர் தினமான மே தினத்தை மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கொழும்பில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகரான அலவிமௌலானாவும் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றார்.

முன்னைய காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஏற்பாடு செய்த மே தினக்கூட்டங்களில் நான் கலந்துகொண்டிருக்கின்றேன். எனவே எதிர்வரும் மே தினத்தில் நாம் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கலாம்.

மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். மே தினத்துக்குப் பின்னர் அரை அரசியலுக்குள் கொண்டுவருவதற்காக நாம் ஏற்பாடு செய்யும் பொதுக் கூட்டம் மே 8 ஆம் திகதி குருநாகலில் நடைபெறும்” எனவும் வாசுதேவ நாயணக்கார தெரிவித்தார்.