செய்திகள்

மாகாணப் பாடசாலை அதிபர்களை தேசிய பாடசாலைகளில் குவிக்கும் மத்திய கல்வி அமைச்சு

வடகிழக்கு மகாணங்களில் உள்ள மாகாணப் பாடசாலைகளில் அதிபர்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுகின்றது.  1AB பாடசாலைகளுக்கு முறைப்படி கல்வி நிர்வாக சேவைத்தரம் உடையவர்களும், அதிபர் சேவைத்தரம்  1 இல் உள்ளவர்களும் நியமிக்கப்படவேண்டும். ஆனால் அத்தகைய சேவைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் அடுத்தடுத்த அதிபர் சேவைத் தரங்களில் உள்ளவர்கள் கடமையில் உள்ளனர்.

இந்நிலையில் 1AB தரத்துக்கு அடுத்த நிலையில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் பொருத்தமான அதிபர்கள் இன்றுவரை இல்லை. இந்த நிலைமை வடகிழக்கு பாடசாலைகளில் தொடர்ந்தவண்ணமுள்ளன.

இத்தகையதொரு இக்கட்டான நிலையில் மாகாணப் பாடசாலைகளில் உள்ள அதிபர் சேவைத்தரம் உள்ளவர்களை தேசியபாடசாலைகளில் குவிக்கின்றது மத்திய கல்வி அமைச்சு.

அதிபர் சேவைத்தரம் ~ 2 அதிபர் சேவைத்தரம் ~ 3 ஆகிய வகை சார்ந்தவர்களை தேசிய பாடசாலைகளில் அளவுக்கு அதிகமாக பிடுங்கியெடுக்கின்றது மத்திய கல்வி அமைச்சு.

மாகாணப் பாடசாலைகளில் இருந்து பரீட்சைகளில் சித்திபெற்று, கடமைநிறைவேற்று அதிபர்களாக கடமையாற்றிய பலர் இவ்வாறு தேசிய பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.

இதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு வடகிழக்கு மாகாணங்களில் உள்ள மாகாணப் பாடசாலைகளை திட்டமிட்டு நசுக்கும் செயலெனவும் விபரித்துள்ளது.

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள், பிரதி அதிபர்களாக இருப்பவர்கள் கல்வி நிர்வாக சேவையைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற சுற்றறிக்கை இருக்கக்கூடியதாக அதிபர் சேவைத் தரம்.2, அதிபர் சேவைத் தரம்.3 இல் உள்ளவர்களை பிரதி அதிபர்களாகவும், உதவி அதிபர்களாகவும் நியமனம் செய்வது முறையற்ற ஒன்றாகும்.

இதைவிட மாகாணப் பாடசாலைகள் பல அதிபர்களே இல்லாமல் சிரேஸ்ட ஆசிரியர்களால் வழிப்படுத்தப்படுகின்றன. இத்தகைய நிலை பல ஆண்டுகளாக உள்ளது.

இதற்கு வடகிழக்கு மாகாணங்களின் மாகாண சபைத் தலைவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கம் வலியுறத்தி நிற்கின்றது.

n10