செய்திகள்

மாசு படத்தில் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தவில்லை: வெங்கட் பிரபு விளக்கம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள படம் மாசு என்கிற மாசிலாமணி. முதலில் மாஸ் என பெயரிடப்பட்ட இந்த படத்திற்கு வரிவிலக்கில் பிரச்னை ஏற்படலாம் என்ற எண்ணத்தில் மாசு என்கிற மாசிலாமணி என மாற்றப்பட்டது. இந்நிலையில் இப்படத்திற்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை. படத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான வசனம் இருந்ததால் வரிவிலக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து சினேகன் கூறியபோது,

‘மாசு படத்துக்கு வரிவிலக்கு கிடையாது. பட உரிமையை சன் டிவிக்கு கொடுத்ததால் தான் மறுக்கப்பட்டது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.அது கிடையாது. மாசு படத்தின் ஒரு இடத்தில், நீ ஈழத் தமிழ் பேசுகிறவனா, உன்னை உதைக்கணும் என்று வசனம் வருகிறது. அதைக் கோடிட்டு ஒரு தமிழ் துறையைச் சார்ந்த அதிகாரி எழுதியிருக்கிறார், ஈழத் தமிழையும் ஈழத் தமிழர்களையும் கொச்சைப்படுத்துவதால் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு கிடையாது என்று. இப்படிப்பட்ட அதிகாரிகளும் இருக்கிறார்கள். இதற்கு நிறைய அதிகாரிகள் வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள். இதே படக்குழு அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். ஆனால் முடியாது என்று சொல்லியிருக்கிறார் என்றார்.

இந்நிலையில் இது குறித்து அப்படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியபோது, ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் வசனங்களோ காட்சிகளோ அந்தப் படத்தில் இல்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மலேசியாவில் வசிக்கும் ஈழத் தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்துக்கு வரவேற்பு அளித்துள்ளனர். படத்தை பார்த்த ஈழத் தமிழர்கள் யாரும் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. வெளிநாடுகளில் முதல்நாள் முதல் காட்சியில் படம் பார்த்தவர்கள் பெரும்பாலும் ஈழத் தமிழர்கள்தான் என்றார்.