மாடுகளுக்கு புல் அறுக்க சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்
மாடுகளுக்கு புல் அறுக்க சென்ற இளைஞர் ஒருவர் சிறிய ஓடை ஒன்றில் விழுந்து கிடந்த நிலையில் தோட்டத் தொழிலார்களால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது. இந்த இளைஞர் இன்று காலை 8.30 அளவில் வீட்டில் இருந்து மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில், நோர்வூட் அயர்பி தோட்டத்தில் இருந்து காசல்ரீ நீர்தேக்கத்திற்கு தண்ணீர் செல்லும் ஓடையில் விழுந்து கிடந்துள்ளார்.
ஓடையில் விழுந்து கிடந்த இளைஞரை மீட்டு டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் முன்னரே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நோர்வூட் அயர்பி தோட்டத்தில் வசித்து வந்த 23 வயதான ராஜதுரை மோகன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞர் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் புல் அறுக்கும் போது வலிப்பு ஏற்பட்டு ஓடையில் விழுந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக டிக்கோயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.