செய்திகள்

மாணவர்களின் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இளைஞர்கள் அணிதிரள வேண்டும்: சுகிர்தன் அழைப்பு

நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக சமூகம் இணைந்து ஜெனீவா பிரேரணை பிற்போடப்பட்டதைக் கண்டித்தும் குறிப்பிட்ட திகதியில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மேற்கொள்ளவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தை வலுப்பெறச் செய்ய இளைஞர்களை அணிதிரளுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் யாழ்.மாவட்டத் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான சந்திரலிங்கம் சுகிர்தன் அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

எமது தமிழ் மக்களின் குறிகாட்டியாக யாழ்.பல்கலைக்கழக சமூகம் இருக்கின்றது. இவர்கள், காலத்துக்குக் காலம் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார்கள். உண்மையில் இன்று சர்வதேசம் எங்களைத் திரும்பிப் பார்க்கின்றது என்றால் அது பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரமாண்டமான பொங்குதமிழ் நிகழ்வின் மூலமே என்பதை எவரும் மறந்து விட முடியாது.

ஆனால் ஆயுதப் பேராட்டம் மௌனித்த பின்னர் பல்கலைக்கழக சமூகம் பல்வேறு வகையில் அடக்கி ஒடுக்கப்பட்டது. மாணவர்கள் திட்டமிட்டு கைது செய்யப்பட்டார்கள். இதனால் மாணவ சமுதாயம் தமது இன உணர்வுகளை அடக்கி வாழ்ந்து வந்தது. சர்வதேசம் தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வினை தரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இன்று சர்வதேசமும் பின்னடிக்கின்ற நிலையில் மீண்டும் மாணவர்கள் பொங்கி எழுந்துள்ளார்கள்.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைதியான முறையில் பேரணி ஒன்றை நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து நல்லூர் வரை நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். எனவே பல்கலைக்கழக மாணவர்களின் கைகளை பலப்படுத்த இளைஞர்கள் அனைவரும் அணி திரண்டு வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.