செய்திகள்

மாணவர்களை குறிவைத்து போதை கலந்த குடிபானம் விற்பனை!

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து பாடசாலையை அண்மித்த பகுதிகளில் புதிய வகை போதைப்பொருளொன்று விற்கப்படுவதாக தெரிவித்துள்ள நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நுகர்வோர் அதிகாரசபையின் சோதனைப் பிரிவுகளும் அதிரடி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணித்துள்ளது.

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து பாடசாலையை அண்டிய பகுதிகளில் குடிபான வகையொன்று விற்கப்படுகின்றது. இந்தக் குடிபான வகையை அருந்தியவுடன் பாடசாலை மாணவர்கள் போதையடைவதாகவும் தெரியவருகிறது.

அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 9 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளை அண்டிய கடைகளில் இந்தக் குடிபான வகை விற்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்படி சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்த மேற்படி அதிகாரசபைத் தலைவர் ஆர்.எம்.கே.ரத்னாயக்க, நாடு முழுவதும் இந்த குடிபான வகைகளை விற்கும் இடங்களைச் சுற்றிவளைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மன்னார், கம்பஹா, பொலநறுவை மற்றும் கண்டி பகுதிகளில் இந்தப் போதைப்பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தற்போது இந்த குடிபான மாதிரிகள் ஒளாடத கட்டுப்பாட்டுச் சபைக்கும் சுகாதார அமைச்சுக்கும் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் நுகர்வோர் அதிகாரசபை, போதைப்பொருள் அடங்கிய குடிபானவகை என உறுதிசெய்யப்படுமிடத்து உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளது