செய்திகள்

மாணவிக்கு இழைக்கப்பட்ட ஈனச் செயல்களுக்கு நீதி கிடைக்காமற் போவதற்காகவா வன்முறைகள்? மாவை எம்.பி கேள்வி

புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஈனச் செயல் புரிந்தவர்ர்களைத் தங்கள் கைகளில் தர வேண்டுமென வன்முறையில் ஈடுபடுவது அந்த மாணவிக்கு இழைக்கப்பட்ட ஈனச் செயல்களுக்கு நீதி கிடைக்காமற் போவதற்கே இச் செயல்கள் இட்டுச் செல்லப்படுகின்றனவா? என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று யாழில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றுப் புதன்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் புங்குடுதீவு மாணவிக்கு நீதி கோரி அமைதி வழிப் போராட்டத்திற்கு அணி திரளுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ்.வணிகர் கழகம் மற்றும் பல்கலைக்கழகச் சமூகம்,மாணவர் இளைஞர் அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருந்தன.

இந்த அழைப்பை ஏற்றுப் பெருமளவில் பல துறைகளையும் சேர்ந்த அறிஞர்கள், மதகுருமார், ஆசிரியர்கள்,மாணவர்கள், பெண்கள் அணி திரண்டிருந்தனர்.

முற்பகல் 11 மணியளவில் ஊர்வலங்கள் வந்து சேர்ந்தன. அந்த வேளைகளில் அந்தப் பெருந்திரளான கூட்டத்தின் முன்னால் பல பேர் மோட்டார்ச் சைக்கிள்களில் தீவிர வரிசையில் சென்றதை அவதானித்து அச்சமடைந்தோம்.

உடனடியாகத் தமிழர் ஆசிரியர் சங்கச் செயலாளர் மற்றும் யாழ்.வணிகர் கழகத் தலைவரிடம் ஏற்படக் கூடிய விபரீதங்கள் பற்றிக் கலந்துரையாடினோம்.

நீதிக்கான இந்தப் போராட்டத்தை முதல் நாளிலேயே வன்முறைக் களமாக மாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து ஆராய்ந்தோம்.

இதன்பின்னர் பொறுப்பானவர்களிடம் ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் படி கோரிக்கை விடுக்கப்பட்டது.

வன்முறை நிகழ்வுகள் இடம்பெறாமல் தடுக்கும் நோக்கிலும் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளில் சில சக்திகள் நடந்து கொள்வதைக் கட்டுப்படுத்தும் வகையிலும் அமைதியான போராhட்டம் நல்லெண்ணத்துடன் நடந்த போதும் விரைவாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

நீதி கோரி அரசிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஆவணங்கள் அரசிடம் அவசர அவசரமாகக் கையளிக்கப்பட்டன.

பின்னர் சில சக்திகள் நீதிமன்றக் கட்டடத்தையும், வழக்கறிஞர்களையும், வாகனங்களையும் தாக்கியும் கல்லெறிந்தும் வன்முறைகளில் ஈடுபட்டதாக அறிந்தோம்.பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் பிரயோகம் செய்து கலகச் சூழலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன என அறிந்த போது வேதனையடைந்தோம்.

இந் நிலையில் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் போதாதென்றும், இராணுவத்தை அழைக்க வேண்டிய அவசியமிருப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் கருதுவதாக அறிந்த எமது தலைவர் சம்பந்தன் இராணுவத்தை ஈடுபடுத்த வேண்டாமெனக் கோரியிருந்தார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ் நகர் நிரூபர்-