செய்திகள்

மாணவி கொலை: புங்குடுதீவில் பதட்டம், யாழ் நகரில் அதிரடிப்படை குவிப்பு

புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உடனடியாகத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி யாழ் நகரில் செவ்வாயன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளையில், புங்குடுதீவுக்கு விஜயம் செய்த யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டத்தரணி ஒருவரையும் அந்த ஊர் மக்கள் சுற்றிவளைத்து தடுத்து வைத்ததையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

viddiyaa_protest viddiyaa_protestr 2

இவர்களுடன் சில காவல்துறையினரும் இருப்பதாகவும் இதனால் அங்கு பதட்டம் எற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையில் சம்பந்தப்பட்டு பொதுமக்களால் பிடிக்கப்பட்ட ஒருவர் தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், அவரை கையளிக்கும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் பொதுமக்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

வித்யாவின் கோரக்கொலையையடுத்து காவல்துறையினர் விரைவாகவும் முறையாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தியே புங்குடுதீவு பொதுமக்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு நடத்துமாறு கோரியிருந்த இருநூறுக்கும் அதிகமான இளைஞர் குழுவினர் யாழ் நகர வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், இதனையடுத்து பெரும் காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் யாழ் நகரின் பல பகுதிகளிலும் பாதுகாப்புக் கடமைக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் யழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

jaffna 1

அத்துடன், வடபகுதியின் பல இடங்களிலும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். செவ்வாயன்று ஒரு மணித்தியாலம் யாழ் நகரப் பாடசாலை மாணவர்கள் வீதியில் இறங்கி தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டிருக்கின்றனர்.

jaffna 3 jaffna 4

வவுனியா கிளிநொச்சி ஆகிய இடங்களிலும் இவ்வாறு மாணவர்கள் போரட்டங்களை நடத்தியுள்ளனர். வித்யாவின் மரணம் தொடர்பில் இதுவரையில் 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காலவ்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

பாடசாலைக்குச் சென்றபோது தனியான காட்டுப்பாங்கான வழியில் வைத்து இனந்தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக மேசாமாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் வித்யாவின் மரணம் வடபகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆத்திர உணர்வை உருவாக்கியிருக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில் ஐந்து பேரை திங்களன்று காவல்துறையினர் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு வந்தபோது, அங்கு யாழ் போதனா வைத்தியசாலை பகுதியில் கூடிய முச்சக்கர வண்டி சாரதிகள் அவர்கள் மீது காவல்துறையினரின் பாதுகாப்பையும் மீறி தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பாக அந்த சந்தேக நபர்களை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.