செய்திகள்

மாணவி படுகொலை: குடாநாட்டில் இன்றும் போராட்டம்

புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனுக்கு நீதி வழங்கக் கோரியும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டவாளர்கள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் இன்றும் போராட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று தமிழர் ஆசியரியர் சங்கத்தினால் பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இன்று வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும், ஒரு மணிநேரம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை நிறுத்தி – அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சு கோரியுள்ளது.

இதனிடையே, யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று சந்தைகள், கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தப் போவதாக, வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் நேற்று வீதியில் இறங்கி நடத்திய போராட்டங்களால் யாழ். நகர் உள்ளிட்ட குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றும் போராட்டங்கள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நேற்று முதல் யாழ். நகர் உள்ளிட்ட பல பகுதிகளில், காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை மற்றும் கலகம் அடக்கும் பிரிவினர் அதிகளவில் வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, வித்தியா கொலையில் சம்பந்தப்பட்டவர் என்று பொதுமக்களால் பிடிக்கப்பட்ட சுவிற்சர்லாந்தில் இருந்து வந்திருந்த மகாலிங்கம் சிவகுமார் என்ற 9வது சந்தேகநபரை காவல் துறையினரிடம் ஒப்படைப்பதாக கூறி, மீட்டு அவரைக் கொழும்புக்கு அனுப்பி தப்பிக்க வைக்க முயன்றதாக கூறப்படும் சட்டத்துறை விரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறன், நேற்று புங்குடுதீவில் சுமார் ஆறு மணித்தியாலங்கள் பொதுமக்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தப்பிக்க வைத்த சந்தேக நபரை கொண்டு வந்தாலேயே, சட்ட விரிவுரையாளர் தமிழ்மாறனை விடுவிப்போம் என்று பொதுமக்கள், அவரைச் சூழ்ந்து கொண்டிருந்தனர்.

நண்பகல் தொடக்கம் வாகனத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் அவர், கடுமையான இராணுவ மற்றும் கடற்படை பாதுகாப்புடன் காவல்துறையினரால், யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதேவேளை, போராட்டம் நடத்திய பொதுமக்களிடம், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 9வது சந்தேக நபரான சுவிஸ் குடிமகனையும், சட்டவாளர் தமிழ்மாறனையும், இன்று யாழ். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாக காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையிலும், நீதி கோரும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலும், இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் தீவிரமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.