போர்க் கோலம் போலக் காட்சியளித்த யாழ் நீதிமன்ற வளாகம்: நேரடி ரிப்போர்ட்
யாழ்.புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர மாணவி வித்தியா படுகொலையின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் ஆசாமி மற்றும் சிலரை இன்று புதன்கிழமை யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முற்பட்ட போது பொதுமக்கள் ஆவேசத்துடன் ஒன்று திரண்டு யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடாத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று புதன்கிழமை யாழ்.நகரில் புங்குடுதீவு மாணவியின் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த நிலையில் யாழ்.நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி வளைத்த பொதுமக்கள் இன்று நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதும் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் ஆயிரக்கணக்கானவர்கள் அப்பகுதியில் குழுமினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைப் கலகமடக்கும் பொலிஸார் தடுப்புப் போட்டு கட்டுப்படுத்த முயற்சித்த போது பொதுமக்கள் பொலிஸாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்லச் செல்ல பொறுமையை இழந்த பொதுமக்கள் தடைகளை உடைத்து நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் ஒன்று திரண்டு நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது சராமரித் தாக்குதல் நடாத்தினர்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இடம்பெற்ற இந்த எதிர்பாராத தாக்குதலால் நீதிமன்றத்தின் முன்பக்கக் கண்ணாடிகள் கடுமையாகச் சேதமடைந்தன. அத்துடன் இரண்டு பொலிஸார்கள், ஒரு சட்டத்தரணி ஆகியோரும் காயமடைந்தனர். நீதிமன்றத்திற்கு வருகை தந்த வித்தியாவின் தாயார் பொலிஸாரின் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தில் அகப்பட்டு மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் போது நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறைச் சாலை வாகனம், சட்டத்தரணிகளின் கார்கள் என்பனவும் சேதமடைந்தன.
ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டிப் பொலிஸார் தடியடி,கண்ணீர்ப் புகைப் பிரயோகம் என்பன நடாத்திய போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதில் தாக்குதல்; நடாத்தினர். இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்தைச் சூழவுள்ள பகுதியெங்கும் போர்க்கோலம் போலக் காட்சியளித்தது. இதனையடுத்து அப் பகுதிக்கு மேலதிக பொலிஸாரும், துப்பாக்கி ஏந்திய விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறைந்திருந்து தொடர்ந்தும் கல்வீசி தாக்குதல் நடாத்திய வண்ணமேயிருந்தனர். அவர்களில் சிலர் அதிரடிப் படையினருடனும்,பொலிஸாருடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
நிலைமை மோசமடையவே பொறுமையை இழந்த பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் ஆர்ப்பாட்டக்காரர்களை துரத்தித் தாக்கத் தொடங்கினர். இதன் போது ஆவேசமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் போத்தல்களை உடைத்தும்,கல் வீசியும் தாக்குதல் நடாத்தினர். அத்துடன் யாழ்.பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்தினர்.இதில் மேலும் மூன்று வரையான பொலிஸார் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து யாழ்.பேருந்து நிலையத்திற்கு அண்மையிலுள்ள பொலிஸாரின் காவல் நிலையத்திற்கும் தீ வைத்தனர்.இதனையடுத்துப் பொலிஸார் மேலும் பல கண்ணீர்ப் புகைப் பிரயோகத் தாக்குதல்களை நடாத்தினர்.பொலிஸாரினதும்,இராணுவத்தினரதும் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து மூன்று பக்கங்களாலும் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தத் தொடங்கினர். இதனால் பொலிஸார் செய்வதறியாது தடுமாறினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் யாழ்.சத்திரத்துச் சந்தியில் பொருத்தப்பட்டிருந்த வீதிச்சமிக்ஞை விளக்குகளையும் சேதப்படுத்தினர்.இதனையடுத்து ஆத்திரமடைந்த பொலிஸார் போராட்டக் காரர்களை கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டவாறே மூன்று பக்கங்களாலும் துரத்தினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிதறி ஓடினர்.அதனைத் தொடர்ந்து நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் யாழ்.நகரில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலையே நீடிக்கிறது.
மேலும் இன்றைய தினம் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இதுவரை 127 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்திய மோட்டார்ச் சைக்கிள்களும், சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பிந்திக் கிடைத்த தகவல்களின்படி யாழ்.நிலைவரங்களை நேரடியாக அறிவதற்காகப் பொலிஸ்மா அதிபர் விசேட ஹெலிகொப்டரில் யாழ் விரைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. அத்துடன் குற்றவாளிகள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விரைவில் மாற்றப்படலாம் எனவும் நம்பகரமான தகவல்கள் தெரிவித்துள்ளன.
யாழ்.நகர் நிருபர்-