செய்திகள்

மாயமான அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்னாள் சமையல்காரர் பிரேதம் கைப்பற்றப்பட்டது

அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் சமையல்காரராக பணியாற்றியவர், வால்டர் ஸ்கீப்(61).
அமெரிக்காவின் பிரபல ஓட்டல்களில் பணியாற்றிய அனுபவம் நிறைந்த இவரை முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டன் கடந்த 1994-ம் ஆண்டு வெள்ளை மாளிகையின் சமையல்காரராக நியமித்தார்.
சுமார் 25 பணியாளர்களுக்கு தலைமையேற்றுவந்த இவர், மறைந்த நெல்சன் மண்டேலா உள்ளிட்ட உலகின் பல முக்கிய தலைவர்களுக்கு விருந்து சமைத்து பரிமாறியுள்ளார். பணிஓய்வு பெற்ற வால்டர் ஸ்கீப் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள டாவோஸ் நகரில் வசித்து வந்தார்.
கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியே சென்ற இவரைப் பற்றி இத்தனை நாட்களாக எந்த தகவலும் கிடைக்காததால் போலீசார் இவரை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை எர்பா மலைப்பகுதி அருகே இவரது கார் அனாதையாக நின்றிருந்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மலையின் மீது தேடுதல் வேட்டை நடத்த முடிவுசெய்த போலீசார், மலையேற்ற வீரர்கள் மற்றும் ரோந்து விமானங்கள் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதன்பலனாக, அங்குள்ள மலையின் மீதிருந்து அவரது பிரேதம் இன்று (உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு) கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்துக்கான காரணம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.