செய்திகள்

மாற்றத்தை விரும்பிய மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கிறோம்: டக்ளஸ்

நடந்து முடிந்த ஐனாதிபதி தேர்தலின் போது மாற்றத்தை விரும்பி வாக்களித்த சகல மக்களின் உணர்வுகளையும்  நாம் மதிக்கின்றோம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:

அரசியல் சூழலில் என்றுமே மாற்றங்கள் நிகழவேண்டும் என விரும்புவது மக்களின் இயல்பான மன உணர்வே.. அந்த வகையில் இரு வேறு வழிமுறைகளில் எமது மக்கள் மாற்றங்கள் நிகழவேண்டும் என்ற நம்பிக்கையோடு தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள்.

நீடித்த ஆட்சியின் ஊடாகவே மாற்றங்களை உருவாக்கி எமது இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கையோடு கடந்த கால தேர்தல்களை விடவும் எமது கோரிக்கைக்காக அதிகூடிய ஆதரவை வழங்கி வாக்களித்த எமது மக்களுக்கு முதலில் நாம் நன்றி செலுத்துகின்றோம்.

இதே வேளை,.. ஆட்சிமாற்றம் ஒன்றின் ஊடாகவே இங்கு எந்தவொரு மாற்றங்களும் நிகழும் என்ற நம்பிக்கையோடு தாமாகவே முன்வந்து வாக்களித்த சகல இன சமூக மக்களின்  மன உணர்வுகளுக்கும் நாம் மதிப்பளிக்கின்றோம்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை எட்டும் எமது இலட்சிய கனவுகளை நடைமுறை யதார்த்த வழியில் தொடரவும், எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் மேலும்  தூக்கி நிறுத்தும் பணிகளை நீடித்து செல்லவும்,..ஆற்ற வேண்டிய செயல்களை ஆட்சிக்கு வந்திருக்கும் புதிய அரசு தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது மக்களின் விருப்பமாகும். இதுவே எமது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஆகும்.

அந்த வகையில் புதிதாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் கௌரவ ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களுக்கும், புதிதாக பதவியேற்றிருக்கும் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது மக்களுக்கான அரசியல் நிலைப்பாட்டில் நாம் உறுதி மிக்க நம்பிக்கையான சக்திகள் என்பதையே நிரூபித்துக்காட்டி வந்திருக்கின்றோம். எமது அரசியல் வழிமுறையும் அதற்கான நம்பிக்கையும் ஒரு போதும் தோற்காது.

மதிநுட்ப சிந்தனைகளே எமது மக்களின் இலட்சியக்கனவுகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் நாம் இனியும் உறுதியுடன் உழைப்போம். இதே போல், நடந்து முடிந்த ஐனாதிபதி தேர்தலின் போது சக தமிழ் பேசும் அரசியல் கட்சி தலைமைகள் தாம் எடுத்த முடிவை இனியும் வழமைபோல் மாற்றிக்கொள்ளாமல்,…புதிய அரசோடு அர்த்தமற்ற பகமையை வளர்க்காமல் நாம் கூறும் மதிநுட்ப சிந்தனை வழியில் எமது மக்களுக்கான சகல உரிமைகளையும் பெற்றெடுக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மக்களுக்கான பணிகள் யாவும் உறுதியுடன் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.