செய்திகள்

மாற்றுத்தலைமைக்கு செல்வாக்கு அதிகரிக்கிறதா?

கரிகாலன்

விக்கினேஸ்வரன் தலைமையிலான மீன் சின்னத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. ஆரம்பத்தில் மாற்றுத் தலைமை தொடர்பில் தடுமாற்றங்கள் இருந்தாலும் கூட, தற்போது சம்பந்தன்- சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பிற்கு சவால்விடக் கூடிய, தலைமை என்னும் அபிப்பிராயம் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்திருப்பதாகவே தெரிகின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு ஐந்து  ஆசனங்களை வெற்றிகொண்டிருந்தது. ஆனால் இம்முறை  அதனை தக்க வைக்க முடியுமா என்னும் சந்தேகம் தமிழசு கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.

இதனை அவர்கள் பகிரங்கமாக கூறாவிட்டாலும் கூட, உண்மையான நிலைமை இதுதான்.  அதேவேளை வடக்கின் தேர்தல் களம் தொடர்பில் வெளியாகும் சுயாதீன கணிப்புக்களின் படியும், விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணியினர் ஆகக் குறைந்தது மூன்று ஆசனங்களையாவது வெற்றிபெறக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதே வேளை வன்னித் தொகுதியிலும் இரண்டு ஆசனங்களைப் பெறக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது வடக்கில், ஒன்றில் வீடு அல்லது மீன் சின்னம் என்னும் நிலைமையே காணப்படுகின்றது. தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் விக்கினேஸ்வரனை வெளியில் விட்டதால்தான் நாங்கள் தேவையில்லாத சவால் ஒன்றிற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவே கருதுகின்றனர். இதன் காரணமாகவே சுமந்திரன் தொடர்பில் அவர்கள் காட்டமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர், நீதியரசர், யாழ்ப்பாண இந்துக் கலாசாரத்தை பிரதிபலிக்கும் தோற்றம், ஜனவசியம் இப்படியான தகுதிகளால் விக்கினேஸ்வரன் தனித்துத் தெரிகின்றார். இதுவே கூட்டமைப்பிற்கு கலக்கத்தை கொடுத்திருக்கின்றது.

கூட்டமைப்பின் மீதான அதிருப்பி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த  ஆட்சியில் அரசின் பங்காளியாக செயற்பட்ட கூட்டமைப்பால், எதனையுமே ஆக்கபூர்வமாக செய்யமுடியவில்லை. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கடுமையாக அடிவாங்கிய பின்னர்தான் ஹம்பரலிய திட்டம் தொடர்பில் கூட்டமைப்பு சிந்தித்தது. ரணில் விக்கிரமசிங்க தீர்வு தருவார் என்று நம்பி ஐந்து  வருடங்களை கூட்டமைப்பு வீணாக்கியது. இந்தக் காலத்தில் கூட்டமைப்பை பயன்படுத்தி அரசாங்கம் சர்வதேச நெருக்கடிகளை நீர்த்துப் போகச் செய்தது.

உண்மையில் கூட்டமைப்பின் அரச ஆதரவினால், இலங்கையின் மீதான சர்வதேசப் பார்வை முற்றிலும் மாறியது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் விக்கினேஸ்வரன் தன்னிடம் இருந்த வடக்கு முதலமைச்சர் என்னும் அதிகாரத்தை பயன்படுத்தி, இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றினார். இங்கு எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. அனைத்தும் அப்படியேதான் இருக்கின்றது என்பதை சர்வதேசத்தின் முன்னால் ஆணித்தரமாக முன்வைத்தார். இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க ராஜதந்திரி சமந்தாபவருடன் தர்க்கம் செய்தார். இவ்வாறான காரணங்களினால்தான் சம்பந்தன் – சுமந்திரன் தரப்பு விக்கினேஸ்வரன் மீது கோபம் கொண்டது. அவரை இரவோடு இரவாக வடக்கு மாகாண சபையிலிருந்து அகற்றத் திட்டம் தீட்டியது. இதற்கு பின்னால் ரணிலின் சூழ்சியும் இருந்திருக்கலாம். ஏனெனில் இந்தக் காலத்தில் தமிழரசு கட்சி கிட்டத்தட்ட ரணிலின் கைப்பிள்ளையாகவே இருந்தது. ஆனாலும் விக்கினேஸ்வரன் தான் எடுத்துக் கொண்ட கொள்கையிலிருந்து விலகியோடவில்லை. தன்னுடைய கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகவே தமிழ் மக்கள் கூட்டணி என்னும் கட்சியை உருவாக்கினார். இருக்கின்ற கட்சியால் தான் நினைக்கும் விடயங்களை முன்னெடுக்க முடியாமல் போகின்ற போது அவருக்கு முன்னால் இருந்த ஒரேயொரு தெரிவுதான், புதியதொரு கட்சி. எனினும் குறுகிய காலத்தில் அவருடைய கட்சியை பதிவு செய்ய முடியவில்லை.

சிறிலங்கா அரசும் விக்கினேஸ்வரன் போன்ற ஒருவர் நாடாளுமன்றம் வருவதை விரும்பவில்லை. அவர் வந்தால் தங்களுக்கு நெருக்கடியாக இருக்குமென்று அவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் விக்கினேஸ்வரனை மற்றவர்களைப் போன்று கையாள முடியாது. அவர் கையாளுவதற்கு கடுமையானவர். இவ்வாறான ஒருவர்தானே இப்போது தமிழ் மக்களுக்கு தேவை!

புதுவை அண்ணர் தன்னுடைய கவிதை வரியில் சொல்லுவது போன்று காலத்தை தவறவிட்டால் பின்னர் கண்டவனெல்லாம் கதவைத் தட்டுவான். விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த க.வே.பாலகுமாரன் அண்ணன் அடிக்கடி ஒரு வாசகத்தை தன்னுடைய கட்டுரைகளுக்கு பயன்படுத்துவார். அது ஒரு அமெரிக்க சிந்தனையாளரின் கூற்று. “வரலாற்றின் தவறுகளை மறப்போர் அந்தத் தவறுகளை மீளவும் செய்யச் சபிக்கப்பட்டவர்களாவர்”. எனவே ஒவ்வொரு காலத்திலும் அந்தக் காலத்திற்கு தேவையானவர்களை நீங்கள் நாடாளுமன்றம் அனுப்பாவிட்டால், பின்னர் ஒவ்வொரு தேர்தல்களிலும் பிழையானவர்களையும் தகுதியில்லாதவர்களையும்தான் தெரிவு செய்வீர்கள். நீங்கள் செய்யும் தவறுகளே உங்களை நிழல்போல் பின்தொடரும். காலங்கள் தோறும் உங்கள் விரல்களே உங்கள் கண்ணை குத்தும். சிந்தித்து வாக்களிக்கும் ஒரு மக்கள் கூட்டமே இப்போது தமிழர் தேசத்திற்கு தேவையாகும்.