செய்திகள்

மாலியில் ஐ.நா தளம் மீது ரொக்கட் தாக்குதல்

மாலியில் ஐக்கிய நாடுகள் தளம் ஓன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
மாலியின் வடபகுதி பாலைவன நகரான கிடாலில் உள்ள ஐக்கிய நாடுகளின் தளத்தின் மீது 30 ற்கும் மேற்பட்ட ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் அமைதிப்படையை சேர்ந்த ஓருவரும் பொதுமக்கள் இருவரும் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.குறிப்பிட்ட தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இதுவரை தெரியவராத அதேவேளை அப்பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தீவிரமாகசெயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அல்ஹைடா சார்பு இஸ்லாமிய தீவிரவாதிகளும்,கிளர்ச்சிக்குழுவொன்றும் பல வருடங்களாக மாலியின் வடபகுதியில் மோதலில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர்களது முன்னேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் இராணுவரீதியில் தலையிட்டிருந்தது.2013 இல் வட மாலியின் பாதுகாப்பை பிரான்சிடமிருந்து ஐக்கிய நாடுகள் பொறுப்பேற்றுக்கொண்டது. அதன் பின்னர் ஐ.நா தொடர்ச்சியான தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளது.
1960 இல் பிரான்சிடமிருந்து மாலி சுதந்திரம் பெற்றது முதல் அதன் வடபகுதிக்கு சுதந்திரம் கோரும் கிளர்ச்சிக்காரர்கள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.ஜிகாதி குழுக்களும் செயற்படத் தொடங்கிய பின்னர் நிலைமை மேலும் சிக்கலானதாகியுள்ளது.
இதேவேளை தலைநகரில் சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.