செய்திகள்

மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு கூட்டமைப்பு உறுப்பினர்களை தலைவர்களாக நியமிக்க கோரிக்கை

புதிய அரசாங்கத்தை தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தவிருப்பதாக தெரிவித்திருக்கும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மாவட்ட அபிவிருத்தி குழுக்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களை தலைவர்களாக நியமிக்க வேண்டும் என்று அரசிடம் கோரியிருப்பதாகவும் விரைவில் அது நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

எங்களுடைய பிரதேசம் மற்றும் மக்கள் கவனிப்பாரற்று இருந்தார்கள். அந்த வகையில் அந்த ஆட்சி முடிவுக்கு வந்திருக்கின்றது. எங்களுடைய அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றுமு; திறமையுடையவர்கள் அவர்களை அவர்களுஐடய பணியை செய்ய விட்டால் மக்களுக்கு நன்மை கிட்டும்.

புதிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கின்ற காரணத்தால் எங்களுடைய பிரதேசங்கள் முன்னேறுவதற்கான செயற்பாட்டை செய்ய இருக்கின்றோம். அத்துடன் கண்காணிப்பிலும் ஈடுபடுவோம். இந் நிலையில் அமைச்சருக்கு பின்னால் போவதும் குறிப்பிட்ட அமைச்சருக்கு தலைசாய்ப்பதுமான நிகழ்வுகள் நிறுத்தப்படவேண்டும். அதிகாரிகள் தமது திறமையின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கின்றேன்.

அமைச்சர்களுக்கு அதிகாரிகள் சலாம் போடுவதை நிறுத்தவேண்டும். நாம் கண்காணித்து அவ்வாறானவர்கள் அவ்வாறான அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு பிரதமருக்கும் நாம் உடன் தெரியப்படுத்தி தட்டிக்கேட்கும் வகையில் எமது செயற்பாடு இருக்கும்.

இதேவேளை இனப்பிரச்சனை உட்பட அரசியல் கைதிகளாக சிறையில் உள்ள எமது இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதும் மீள் குடியேற்றம் எமது மக்கள் தங்களது சொந்த காணிகளில் இடம்பெறவேண்டும் என்பதும், எமது மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்க காரணமான வட மாகாண ஆளுனர் மற்றும் பிரதம செயலாளர் உட்ப வடக்கு கிழக்கில் உள்ள அரச அதிபர்கள் மாற்றப்பட்டு சிவில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் அமர்த்தப்படவேண்டும் என்பதும் எமது கோரிக்கையாகும்.

எமது மக்களின் சுதந்திர வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்கு இந்த அரசை பயன்படுத்தவுள்ளோம். அந்த வகையில் எமது கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. எமது மக்களின் ஆர்வத்தையும் செயற்பாட்டையும் இந்த அரசு பார்த்திரிக்கின்றது என்பதனால் எமது மக்களுக்கு செய்யவேண்டிய தேவையும் கடமையும் இந்த அரசுக்கு உள்ளது.

அதேவேளை மாவட்ட அபிவிருத்தி குழுக்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களை தலைவர்களாக நியமிக்க வேண்டும் என கோரியுள்ளோம். அது நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கின்றோம.